Thursday, September 27, 2018

முதல் தாழ்ச்சி



இனிய ஜெயம் 

நண்பன் ஒருவனின் மரணம் . இரு தினங்களின் இரவுகளும் கடும் மனச்சோர்வு . நட்பில்  நினைவுகள் போல சுவர்க்கம் வேறில்லை .நட்பின் பிரிவில் நினைவுகள் போல நரகமும் பிறிதில்லை .  வெண்முரசின் குருஷேத்திர முதல் நாள் இரவில் எஞ்சியவர்களின் வலியின் சாயலில் கொஞ்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் . பெரும்பாலான மரணங்கள் போல இதற்கும் நான் செல்லவில்லை . இறுதியாக அவனை கண்ட உயிர்ப்பு அது மட்டுமே உள்ளே இருக்கட்டும்  என்றொரு பேராசை .   இரவுகளில் நட்பின் நினைவை தவிர்க்க மீண்டும் மீண்டும் , குருஷேத்ர இரண்டாம் நாள் போரை மீள மீள வாசித்துக்கொண்டு இருக்கிறேன் . 

அனைத்து அறங்களையும் கைவிடுக  என்னையே சரணடைக என்று சொன்ன நீலனின் சொல் இன்னமும் பார்தனின் அகத்தில் சென்று தைக்கவில்லை .  ஆகவே பீஷ்மரின் அம்பு பார்த்தனை வந்து தைக்கிறது .  அர்ஜுனன் போன்றவன் அல்ல அபிமன்யு . அவன் அறங்களை கைவிட்டு அசுரர் முறையில் போர் செய்கிறான் . ஒரு வேளை அபிமன்யு சாரதியாக நீலன் அமர்ந்திருந்தால் அன்றே பீஷ்மர் சரிந்திருப்பாரோ என எண்ணிய மறு கணம் , அபிமன்யுவின் அசுர நெறி சார்ந்த எந்த அம்புகளும் பீஷ்மரை தொடாத சித்திரம் வருகிறது .  பீஷ்மரை புறமுதுகு காட்ட வைத்ததாக அபிமன்யு சங்கு கொண்டு முழங்குகிறான் . பாவம் அர்ஜுனன் வசம் பீஷ்மர் சொன்ன சொல்லை அவன் கேட்டிருக்க வில்லை 

''சிம்மம் உண்ண விரும்பாத இரைகள் சில உண்டு ''  ஆம்   அபிமன்யுவின்  குருதி குடிக்க பீஷ்மருக்கு எந்த தடையும்  இல்லை  அவன் சத்ரிய போர் நெறி பேணும் வரை .  இன்று பிழைத்தான் அபிமன்யு . பீமன்தான் கொலைவெறித் தாண்டவம் ஆடுகிறான் .  சிறு வயதில் பீமனுக்கு நஞ்சூட்டி அவனை கங்கையில் தள்ள முன் நிற்ப்பவர்களில் முதல்வன் சுஜாதன் . அன்று பீமன் நினைவு தப்பும் முன் சொல்லும் இறுதிச்சொல் ''சுஜாதன் நல்ல குழந்தை '' . இன்று அந்த நல்ல குழந்தையின் மார்பைப் பிளந்து எறிகிறான் பீமன் .

பீஷ்மரின் வில் தாழும் கணம் மிக மிக அந்தரங்கமான சித்திரம் கொண்டது .ஆம் அப்போது அவரது சாரதியாக விச்வசேனர் இல்லை . பீஷ்மர் வேறு ஏதோ ரதத்தின் விளிம்பில் தோற்றி நிற்கிறார் . விஸ்வசேணன் ஓட்டும் தேரே அவரது நிலைபெயராமைக்கு அஸ்திவாரம் .சற்றே நிலை மாறினார் .நிலை பெயர்ந்தார் . பீமனின் பின்னால் அம்பை அன்னையின் வஞ்சம் நின்றிருக்கலாம் .அனைத்துக்கும் மேலாக பீமனின் முன்னாள் நின்றது தந்தையின் கருணை கணம் . முதன் முதலாக பீஷ்மர் பீமனை காணும் சித்திரம் இப்போது உள்ளே வலிமையாக எழுகிறது . கௌரவ ,பாண்டவ மைந்தர் நிறையில் பீமன்தான், நிலைத்த சிலை போல இருக்கும் பீஷ்மரை அசைய வைக்கிறான் .  அன்று அனைவரது பிடிக்கும் சிக்காமல் தப்பி ஓடி ஒளிந்தது பீமன் கொண்டு வந்து விட்ட பாம்பு . இன்றும் அதேதான்  . அன்றுபோலவே கௌரவ சகோதரர்கள் அனைவரையும் சிதறடித்து விட்டான் பீமன் . அன்று போலவே பீஷ்மர் அதை பார்த்து சற்று நிலை பெயர்ந்து விட்டார் .  அன்று தப்பிய அரவம் இன்றும் தப்பி விட்டது

கடலூர் சீனு