Monday, September 10, 2018

வெண்முரசு கட்டுரைகள்



அன்புள்ள ஜெ சார்

மதுரை புத்தகக் கண்காட்சியில் வெண்முரசு நாவல்களை வாங்கினேன் . மதுரையில் உங்களை ஓட்டலில் வந்து சந்தித்தேன். ஞாபகமிருக்கும் என நினைக்கிறேன். வெண்முரசை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தாலும்கூட புத்தகமாகவும் வாசிக்கவேண்டும் என்று தோன்றியது.

ஈரோடு வெண்முரசு சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மிகவும் உதவியாக இருந்தன. இவற்றில் அருணாச்சலம் மகாராஜன், ராஜகோபாலன் ஆகியோரின் கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. வாசிக்காத வாசகர்களுக்கும் வெண்முரசை அறிமுகம் செய்பவை. இவற்றை ஏன் இந்த கடிதங்களுடன் வெளியிடவேண்டும் என்று தோன்றியது. வேறு இதழ்களில் இக்கட்டுரைகள் வந்திருந்தால் ஏராளமான வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கும் அல்லவா?

சுகுமார்


அன்புள்ள சுகுமார்

எந்த இலக்கிய இதழைவிடவும் என்னுடைய jeyamohan.in அதிக வாசகர்கள் கொண்டது. ஆனால் வெண்முரசை அதில் தொடர்ந்து முன்வைக்கவேண்டாம் என நினைக்கிறேன். வெண்முரசும் அதிலேயே வெளியாகிறது, அதிலேயே விமர்சனமும் வருவது நன்றாக இருக்காது.

இந்தத்தளம் வெண்முரசின் வாசகர்கள் பெரும்பாலானவர்களால் வாசிக்கப்படுவது. ஆகவே இங்கே வெளியிடுகிறேன். வெண்முரசு வெளிவரும்போது அந்த கட்டுரைகளின் அடியிலும் இணைப்புக்கள் அளிக்கப்படும்

அத்துடன் இன்றைய சூழலில் வெண்முரசை பாராட்டியோ ரசித்தோ எழுதப்படும் கட்டுரைகளை எந்த இதழும் வெளியிடாது என்பதே நிலைமை. வசைபாடியும் மட்டம்தட்டியும் எழுதப்படுவன, அவை எந்த அளவுக்கு அசட்டுத்தனமாக இருந்தாலும், வரவேற்கப்படுகின்றன. நான் ராஜகோபாலனிடம் அவர் கட்டுரை ஏதேனும் இதழில் வெளிவரலாமே என்று கேட்டேன். “எந்த இதழ் வெளியிடும் சொல்லுங்க’ என்றார். என்னால் பதில்சொல்லமுடியவில்லை

எப்போதும் தமிழ்ச்சூழல் இப்படித்தான் இருந்துள்ளது

ஜெ

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்