Friday, September 7, 2018

வெண்முரசு ஈரோடு சந்திப்பு



அன்புள்ள ஜெ,


சேலத்திலிருந்து பிரகாஷ். நான் தொழிலாளர் நலத்துறையில் தட்டச்சராக தற்காலிகமாக பணிபுரிகிறேன்.  ஈரோடு வெண்முரசு வாசகர் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டேன்.  பெருந்துறையில் இருந்து பண்ணை வீட்டிற்கு வரும்போதே உங்களிடம் எப்படி அறிமுகம் செய்து கொள்வது என சிந்தனையிலேயே வந்தேன்.  காரிலிருந்து தங்களை பார்த்ததும் திண்பண்டங்களைக் கண்ட சிறுவன் மனது போல உற்சாகம் தொற்றிக்கொண்டது. மிக எளிமையாக அமர்ந்து நையாண்டி செய்து கொண்டிருப்பதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிக இயல்பா இருக்காறே நீலம் மலர்ந்த நாட்களில் பித்து நிலையில் எப்படி இருந்திருப்பார் என் நினைத்தேன்.

 தங்களிடம் தயங்கி தயங்கி அறிமுகம் செய்து கொண்டேன்.  "நீங்க குரூப் 2 ஆபிஸரா என கேட்டீர்கள். நான் இல்லை எனக் கூறினேன்.  உடனே கிருஷ்ணனிடம் இவர் அந்த குரூப் 2 ஆபிஸர் பிரகாஷ் மாதிரி இருக்கார்னு சொன்னீங்க. இல்லை இவர் புதுசா இருக்கார்னு கிருஷ்ணர் கூறினார்.  ஓகே சாப்பிடலாம்னு சொல்லி சாப்பிட சென்றோம். நடப்பு நிகழ்வுகள் பேசுகிறீர்கள்.  கருணாநிதி-க்கு அஞ்சலி ஏன் எழுதவில்லை என கேட்ட போது, நிறைகுடம் தழும்பாமல் பதில் அளித்தீர்கள்.  இவ்வளவு பெரிய ஆள் மிக மிக சாதாரணமா இருக்காறே, இவரை இவர் முன்னாலேயே கிண்டல் செய்றாங்க.  இவரும் சிரிச்சிகிட்டே இருக்கார், இப்படி ஒரு எழுத்தாளரின் வாசகராக இருப்பது எனக்கு மிக உவகையாக இருந்தது. என் தந்தையிடம் கூறினேன், அப்பா இவர் ரொம்ப சாதாரணமா இருக்கார், இவரை கிண்டல் பண்றாங்க, ரொம்ப ஜாலியா இருக்கார்னு பகிர்ந்தேன். மனைவியிடமும் நான்கு முறை கூறினேன்.  


அங்கு அறிமுகமான நண்பர் பாலசுந்தரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர், யானை டாக்டர் படித்தீர்களா? என கேட்டதும் இல்லை என்றேன்.  முதலில் அதைப் படிக்குமாறு கூறினார். பிறகு குருகு பறவையைப் பற்றிப் பேசினோம்.  நேற்று தான் யானை டாக்டர் படித்தேன். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்றே பட்டது.  பிறகு பாலசுந்தரிடம் இந்த டாக்டர் நிஜமா அல்லது ஜெ-வின் கற்பனையா எனக் கேட்டேன். நிஜம் தான் என்று சொன்னதும், டாக்டர் கே-வைப் பற்றி தாங்கள் இன்னும் ஏதேனும் கூறினால் மகிழ்வாக இருக்கும். தாமரைக்கண்ணனின் பேச்சு நன்றாக இருந்தது.  விதுரர் அம்பாலிகையிடம் பேசி முடித்து வரும்போது அவர் இவ்வாறு நினைத்துக் கொள்வார், மானிட உறவை இயக்கும் அடிப்படை விசையே அச்சம் தானோ என ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ரதிவிஹாரி வரையில் நான் அவ்வளவு ரசித்து படித்தேன் ஜெ.  அந்த இடத்தை பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன் அழகாக விளக்கினார்.  மீண்டும் இப்படி ஒரு அமர்வில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.  நன்றி

பிரகாஷ்