Thursday, September 6, 2018

போரைப்பார்த்தல்



அன்புள்ள ஜெ

செந்நாவேங்கை நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரு பெரிய ஆறு ஒழுகிப்போய் அருவியாக விழுவதைப்பார்ப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது நூற்றுக்கணக்கான பக்கங்கள் வழியாக மெல்லமெல்ல நாவல் போரை நோக்கிச் செல்கிறது. எவ்வளவு நுட்பமான செய்திகள். இத்தனைச் செய்திகள் ஏன் என்று நானே யோசித்தேன். ஆனால் முடித்தபோது தோன்றியது, நான் நாவலை வாசிக்கவில்லை. அதற்குள் வாழ்ந்திருக்கிறேன் என்று. அத்தனை தகவல்கள் வழியாகத்தான் நம்மால் அதற்குள் வாழமுடியும். அந்த அனுபவத்தை அளித்தது அந்தசெய்திகள்தான். அதையெல்லாம் எப்போதுமே சின்னவயதைச் சேர்ந்தவர்களின் கண்கள் வழியாகச் சொல்கிறீர்கள். சின்னவயதினர் பொதுவாக இத்தனைக் கூர்மையாக எல்லாவற்றையும் பார்ப்பார்கள். அவர்களின் பார்வை வழியாக நாமும் போர்க்களத்தைப்பார்க்கமுடிந்தது

சரவணக்குமார்