Friday, September 14, 2018

விண் புரள்தல்



இனிய ஜெயம் ,

வெண் முரசு  நாவல் வரிசைகளிலேயே ,நீலத்துக்குப் பிறகு பலமும் ஆழமும் கூடிய தொடக்கம்  திசைதேர் வெள்ளம் நாவலுக்கு நிகழ்ந்திருக்கிறது .  வனத்தில் பெய்யும் அத்தனை மழையும், கோடி கோடி இலை நாவுகள் சொட்டும் அத்தனை துளியும் ,கூடிப் பெருகிப் பாய்ந்து ,கடல் சேர்வது போல , வெண் முரசில் தெய்வங்கள் துவங்கி மனிதர்கள் மிருகங்கள் வரை அத்தனை உளவிசையும் முயங்கிச் சுழித்து,பெருகி ஓடி ,குருஷேத்திரம் வந்து சேர்ந்திருக்கிறது .   திசைதேர் வெள்ளம்.

மழைப்பாடல் நாவலில் துவக்கமே இந்திரன் சூரியன் என தெய்வங்கள் இடையே சமர் துவங்கி விடுகிறது . எஞ்சிய போரை பூலோகத்தில் நிகழ்த்த தெய்வங்கள் தரை இறங்கிய தருணத்துக்குப் பிறகே பீஷ்மர் அஸ்தினபுரி நுழைகிறார் .

இதோ முதல் நாள் போரின் எச்சத்தை ருசிக்க பைசாசங்கள் ,பாதாள தெய்வங்கள் எழுந்து விட்டன . இறுதி நாள் மயான கொள்ளையை நிகழ்த்த சாயை எழுந்து வருவாள் . சாயையின் வடிவான அம்பை .இதோ களத்துக்கு வந்து விட்டாள் . மைந்தனை காக்க கங்கையும் எழுந்து விட்டாள்.

கங்கைக்கும் பீஷ்மனுக்கும் இடையே நிகழும் உரையாடல் மிக முக்கியமானது . பீஷ்மர் அம்பையில் கங்கை கண்டதை சொல்கிறார் . கங்கை ஆம் எனது பிறிதொரு வடிவே அவள் என்கிறாள் .  குந்தியை மணக்க பயணிக்கும் பாண்டு இரவில் கங்கையை கண்டு அடையும் அதே தரிசனம் .

பீஷ்மர் அம்பையில் கங்கையை கண்ட கணம் இப்போது உள்ளே வலிமையாக எழுகிறது .  படகில் கங்கை மீது ஆணையிட்டு அம்பை உறுதி சொல்கிறாள் , தன்னை விடுவிக்கா விட்டால் கங்கையில் விழுந்து மாய்வேன் என்கிறாள் . அக் கணமே பீஷ்மர்  அம்பையில் கங்கையை கண்ட கணம் . 

கங்கை நீலனை அஞ்சுகிறாள் .  பீஷ்மனின் வில்லை தளர வைக்க , நீலன் சிகண்டியை முன் நிறுத்துவான் என்பதை அறிந்திருக்கிறாள் . பாதுக்காப்பாக பீஷ்மனுக்கு துணையாக அஷ்ட வசுக்களை நிறுத்துகிறாள் .  பீஷ்மனின் வில் ஒவ்வொரு முறை தாழும் போதும் ஒவ்வொரு வசுவாக விலகி செல்வர் எனும் நிபந்தனை .

நீலனை நான் அறிவேன் . பாவம் கங்கை .தனது மைந்தனுக்கு எது பாதுகாப்பு பலம் என நியமிக்கிராளோ அதைத்தான் பீஷ்மனுக்கான பலவீனமாக நீலன் மாற்றுவான் .  யாரிவார் அந்த அஷ்ட வசுக்கள் , கங்கையில் மூழ்கி இறந்த பீஷ்மனின் சகோதரர்களாகவும் இருக்கக் கூடும் . கங்கையின் ஆசி மீது ,  பீஷ்மரின் புன்னகைக்கு அதுதானே விடை .

கடலூர் சீனு