Sunday, September 2, 2018

வெண்முரசின் காவிய தருணங்கள்:--ராஜமாணிக்கம்
காவியங்கள் எனக்களிப்பது மானுடரின் விரிவை, அறிவை, அன்பை, இதை எல்லாம் தாண்டி அடிப்படையில் உள்ளுறையும் ஆன்மா வெளிப்படும் தருணங்கள்  மட்டுமே முழு ஒளி பெற்று விஸ்வரூபம் கொள்கின்றது எந்த படைப்பும்.  அப்படி வெண்முரசில் என் வாசிப்பில் நான் மெய்ப்பு கொண்டு உள்ளம் விதிர்த்து நின்ற தருணங்களையே இங்கு சுட்ட விரும்புகிறேன்.  

வெண்முரசும், வாழ்வும்    ஊழ்,அறம், தீச்சொல்,, கடமை,கனவு, பயம் எனும் அறுகோண கலைடாஸ்கோப்பிற்குள் மானுடர்களை விட்டு பிரம்மம் ஆடும் விளையாட்டு போல த்தான் இருக்கிறது. இதில் காவிய மாந்தர்கள் தங்கள் காவிய குணத்தால் தனித்து ஒளிர்கிறார்கள். அதி உச்ச தருணத்தில் மானுடரின் அக ஆற்றல் உச்சம் கொள்கிறது, ஆனால் காவிய மைந்தர்கள் மட்டுமே அதை வென்று செல்கிறார்கள், தோற்றாலும் காவியத்தில் பேருரு கொள்கிறார்கள். மானுடம் என்பது எத்தனை மகத்தானது என்பதற்கு வெண்முரசின் சாட்சிகள்.

பிரம்மமே, இறையே இவர்கள் வெறும் மானுடர்கள், ஊழ் உருட்டும் பகடைகள் என்று ஒரு கணமும், காலம், வரலாறு, ஊழ்,தற்திறம் இவைகளை எல்லாவற்றையும் தாண்டி காவிய நாயகர்கள் எப்படி மானுடத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள் எனும் சுவாரஸ்யமும், பெருமிதமுமே வெண்முரசிற்கான வேட்கையாக முன் செலுத்துகிறது. கர்ணணோ,ஏகலவனோ, அரவானோ,தேவவிரதனோ, சத்யவதியோ,கிருஷ்ணையோ காலம் அவர்களுக்கு அளிக்கும் சவாலை, பேரியற்கையின் காய் நகர்த்தல்களுக்கு எப்படி தாங்கள் மறுபக்கம் நின்று திருப்பி அளிக்கிறார்கள் என்பதும் நம்மை அவர்களோடு உணர்வு ஒன்ற செய்கிறது. 

அம்பையின் கண்ணீருக்கும், கர்ணனின் அரங்கேற்றத்தில் அதிரதனை பணியும் தோறும், தன் அக ஆசையை,பின் வரும் சந்ததிகளை நெருப்பில் இட்டு அம்பை அன்னைக்காக தன்னை அர்ப்பணிக்கும் சிகண்டிக்காக, இச்சைகளை நெறிக்காக துறக்கும் தேவவிரதனுக்காக , பெரும் கனவுகள் கொண்டிருக்கும் சகுனிக்காக, மாமலரை தேடும் பீமனுக்காக, அறத்திற்கும், தன்னறத்திற்கும், குல அறத்துக்கும் இடையே ஆடி கொண்டிருக்கும் ஊசலாட்ட தருமனுக்காக, இதை எல்லாம் தாண்டியும் அவர்கள் கொள்ளும் விஸ்வரூபமும், சிறுமையும் மானுடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆதார விசைகள்.அதையே நாம் ஊழ் என்கிறோம்

அதன் மீது ஏறி அதை வழி தேர்ந்து கொண்டு செல்லும் வினைவலர்கள் மீது காவிய ஒளி பட்டு அந்த தருணங்களின்  திருப்பங்கள் நிலை கொள்ளும் கணங்களையே நான் கவனப்படுத்த விழைகிறேன்.

1.அம்பையும் பீஷ்மரும்:


 பீஷ்மர் எப்படி தான் ஒரு மகத்தான மானுடன் என்றும் தேவவிரதன் என்றும் தனக்கே கூறிக்கொள்கிறார். அம்பை தன் தாய்மையையும் காதலையும் சொல்லும் [போது உணர்வின் காற்றில் ஏறிப் பறக்கிறார்.

2. திருதராஷ்ட்ரனின் பேருரு


பெருந்தன்மை, மற்றும் பாசம் எல்லாவற்றையும் விட பெரிது.

3.அம்பிகை, அம்பாலிகை, சத்யவதியின் கானேகல்:


மழைப்பாடல் ஒட்டுமொத்த மகாபாரதமுமே பெண்களின் ஆற்றலுக்கான போர்தான் சத்யவதி, அம்பிகை, குந்தி, கிருஷ்ணை என்று பெண்களின் ஆசையும் கனவும், அவர்கள் தான் மைய அச்சாக இருந்து சுழல்கிறது. அதில் அம்பிகை, அம்பாலிகையோடு சத்யவதியும் காட்டுக்கு செல்லும் முடிவு மிகப்பெரிய திருப்பம். நான்கு ஆசிரமங்களில் வானபிரஸ்தத்தை அவ்வளவு பெரிய கனவு கொண்ட சத்யவதியும் ஏற்கிறார் என்பது முக்கியமானது.

4. கர்ணனின் அரங்கேற்றமும், பேருருவும்:


கண்ணீரின்றி கடக்க முடியாத அத்யாயங்களில் ஒன்று, துரியோதனன், கர்ணன் இருவரும் வித்தையால், திறனால் மானுட உள்ளங்களை வெல்லும் கர்ணன் அதோடு அதிரதனின் பாதம் பணியும் அதிமானுடன். வீரனை வெல்ல விதியால் முடியாது .

5.துரோணரின்துரோகம், ஏகலைவனின் குருபக்தி, சுவர்ணையின் நவகண்டம் 


துரோணர் போன்ற ஒரு ஆசிரியர், குரு கூட தன் மைந்தன் மீதான பாசத்திற்காக இறங்குவது, ஏகலைவனின் அர்ப்பணிப்பு, சுவர்ணையின் தீச்சொல்லும் நவ கண்டமும் ஏற்படுத்திய அதிர்ச்சி.
6. துரோணருக்கான அர்ஜீனனின் குரு காணிக்கையும், இழிவும் துருபதனின் நிலையழிவும், அதர்வ வேள்வியை யாத்தல். பழி, அகங்காரம் எவ்வள்வு கீழ்மைக்கு செல்லும் எனும் உச்ச பட்ச உதாரணம்.


அனல்விதை: பிரயாகையை பொறுத்தவரை சில பொனொளிர் தருணங்களையும் நிகழ்வுகளை சொல்லாம் என நினைக்கிறேன், அரக்கு மாளிகை பற்றி காந்தாரியிடம் விதுரன் கேட்கும் போது என் கணவன் வாரணவதத்திற்கு ஒப்பி இருப்பாரென்றால் என் தேய்வங்கள் பேய்கள் என்றாகுக என்பார். அதே போல குண்டாசியின் நிலையழிவு, கர்ண-பரசுராமர் இடையே நிகழும் உரையாடலில் தான் என்றும் தார்த்ராஷ்ட்ட்ரனுக்காக வில் ஏந்துவேன், என் சொல் மாற்றத்தக்கதல்ல என்பான். அதே போல ecastical fantasy என்று பீமனை தேர்காலில் பூட்டி இழுக்க சொல்லும் கிருஷ்ணையின் மனஓட்டம்.பின்னாளில் மாமலர் துவங்கும் விதை இந்த இடத்தில் உறைகிறது. 

சுருதை அன்னையின் ஆளுமை. அஸ்வதந்தம் விதுரன் இடையேயான உறவு. விதுரரை கிருஷ்ணர் கம்யூனிஸ பாணியில் அவச்சொல்கள் மூலமாக வரலாற்றில் இடம் பெற செய்வேன் என்பது, வாரணவதம், வாரணவததிற்கு பின்னான கணிகரின் செயல்,துரியன் திருதாவிற்கு இடையேயான உறவுகள். ஜரன், சித்ரகர்ணி, குஹ்ய ஜாதை, குஹயசியேயஸ் என்று விலங்குகள் வழியாக புதியவாசல் வழியாக ஒளி பாய்ச்சும் நிகழ்வுகள். துருவன் பாகீரதனின் உறுதி, தெய்வத்தால் ஆகாதெனினும் முடிக்கும் மானுட ஆற்றல்.

7. தழல்நடனத்தில் ஐவருக்கும் கிருஷ்ணைக்குமான உறவில் பார்த்தனுடன் அவளின் சச்சரவும், அதன் பின் துய்க்கும் காமமும்


8.துவாரகை எனும் பெரும் கனவு, அதன் வரவேற்பு தோரண வாயில், வணிக விதிகள், காற்றில் ஏறும் சுழல் துலாக்கள் என்று பெருவாயில் புரத்தின் அத்தனை அத்யாயங்களும், கிருஷ்ணர் என்ற மாபெரும் கனவை கொ ந்டிருப்பவனை யுகங்கள் தாண்டி பார்ப்பவனை காண்பிக்கிறது.


9. திருஷ்டத்யமனன் சுப்ரை உறவும், ஆழ்மனதின் கீழ்மைகள் மானுட உணர்வை காதலை, பெரும் அன்பை எல்லாம் ஒப்புக்கொள்ள தயங்கியே தான் இருக்கும் ஆனால் ஆழ் மனதிற்கு அது தெரியும் சூரசேனனுக்கு மரீசையில் தெரிந்தது, ஹிரண்யபாகுவிற்கு சுவர்ணையில் தெரிந்தது. பீமனுக்கு இடும்பியிடம்,அம்பிகைக்கு விசித்திர வீரியனிடம் கர்ணனுக்கு விருஷாலியிடம் என்று ஒரு பெரும் நிரை இருக்கிறது. நெஞ்சின் அருகில் குத்தப்பட்ட குறுவாள் என்று அகம் நடுங்கிய தருணம்.10 சியாமந்தகமணி எப்படி அக்ரூரரையும்,காளிந்தியையும் அடையாளம் காட்டுகிறது . பொருள்கொள் காமம், விழைவு எந்த எல்லைக்கு தள்ளும் என்பதன் நிகழ் சாட்சியாக அக்ரூரர், காளிந்தியின் காதலுக்கு முன் அருமணியும் வெறும் கல்லாகிறது .


11. அரிஷ்ட நேமியின் மெய் ஞானம் : 12. அர்ஜீனனுக்கும் வர்ணபட்சனுக்குமான உரையாடல் மற்றும் ஐம்பெருகுளங்கள் அதை வென்று செல்வது


13. பெருவிரிவும், தீராப்ழியும் ஒரு வட்டத்தின் அடுத்தடுத்த இரு புள்ளிகள், திரியனும், துச்சாதனனும் செல்லும் பாழிருளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வரும் ஊழ்