கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்
அன்பு ஜெயமோகன்,
அருணாச்சலம் மகாராஜனின் கிராதம் குறித்த கட்டுரையை வாசித்தேன்; வெண்முரசைத் தொடர்ந்து வருபவர் எனும் புள்ளியில் இருந்து அவரின் அனுபவங்களை உள்ளவாறே விரித்திருக்கிறார். சற்று கடினமான மொழிநடைதான். எனினும், தவற விடக்கூடாத வாசிப்புத் தருணங்களைத் தொகுத்துத் தருவதாகவே அக்கடிதம் அமைந்திருந்தது. அ.மகாராஜனுக்கு அன்பும், நன்றியும்.
வெண்முரசு(நாவ்ல் தொகுதிகள்) பெயர்க்காரணம் பற்றிய புரிதலோடு அவரின் கடிதம் நிறைவடைந்திருந்தது. குருதியின் அடர்நிறம் படிந்த செம்முரசு, குருதித்துளிகளின் வாசமற்ற வெண்முரசாக உருமாறும் காட்சியைச் சுட்டியதாகவே நான் புரிந்து கொள்கிறேன்; ஏற்புடைய கருத்தே. வெண்முரசு எனும் பெயரைப் பிறிதொரு புள்ளியில் இருந்தும் நான் கவனிக்க விரும்புகிறேன்.
வெண்மை எனும் நிறம் தனிச்சிறப்புடையது. தன்னை நோக்கி வரும் வண்ணங்களை அது ஒருபோதும் தவிர்ப்பதில்லை; அவற்றுக்கான இடங்களைத் தன் பரப்பில் உவந்தளிக்கிறது. கறுப்பு நிறத்தை எடுத்துக் கொண்டால்.. தன்னைத் தவிர எந்நிறத்தையும் அது தன்னிலே அனுமதிக்காது. வெண்மையை ஒளியாகவும், கறுப்பை இருளாகவும் உருவகித்துக் கொண்டு பார்த்தால், இன்னும் எளிமையாய் விளங்கும். ஒளி தன்னைக் கொண்டு தன்னைச் சூழ்ந்து இருக்கும் அனைத்து காட்சிளையும் எவ்விதப் பேதமும் இன்றிக் காட்டும்; ஒருபோதும் தன்னை முன்வைக்காது. இருளோ தன்னைச் சூழ்ந்து இருக்கும் காட்சிகளை முழுக்க மழுங்கடித்து விடும்; தன்னை மட்டுமே முன்வைக்கும்.வெண்மை பன்மைத்தன்மையைக் குறிப்பது; கறுப்பு ஒற்றைத்தன்மையை மட்டுமே வேண்டுவது.இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
ஆதித்தரிசனங்களில் ஒன்றான ஆசீவகத்தின் ஆறு வண்ணக் கோட்பாட்டில் வெண்மை முக்கியமான இட்த்தைப் பெறுகிறது. கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் அல்லது பொன்நிறம், வெண்மை என ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டுப் படிநிலை சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிறங்களை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என யோசிக்கவே வேண்டாம். இயற்கையில் இருந்துதான் அவர்கள் இந்நிறங்களைப் பெற்றிருக்க முடியும். ஒரு நாளுக்கான விண்ணையும், மண்ணையும் - கதிரவனின் நகர்வுகளைக் கொண்டு - கவனித்தால், ஆறு நிறங்களின் பரிணாமத்தை நம்மால் ஓரளவு தெளிந்து கொள்ள முடியும். அதிகாலைக்குச் சற்று முன்னதான பொழுதில்.. வானின் நிறம் கறுப்பு. அதிகாலை நேரத்தில் வானின் நிறம் நீலம். காலைப்பொழுதில் மண் தெரியத் துவங்கி விடும். மண்ணில் அடர்ந்து பரந்திருக்கும் பசுமை (வேளாண் சமூகத்தின் பார்வை என்றும் கொள்ளலாம்) கவனம் பெறும். காலம் கொஞ்சம் கடக்க கதிரவன் சிவப்பாகத் தெரியும். பகற்பொழுதில் கதிரவன் பொன்நிறத்தில் ஒளிரும். பகல் கழிந்த அந்திப்பொழுதில் வெண்மையாய் வானம் காட்சி அளிக்கும். இப்படியான இயற்கைச் சுற்றையே ஆறு நிறக்கோட்பாடாக்கி இருக்கிறார்கள் என உறுதியாகச் சொல்ல இடம் இருக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்வை ஆறு நிலைகளாகப் பகுத்துக் கொண்டு அதை மூன்று படி நிலைகளாக்க் கொள்கின்றனர் ஆசீவகர்கள். முதலில் வரும் இரண்டு நிறப்பருவங்கள் முதல் நிலையாகவும்.. தொடர்ந்து வரும் நிறப்பருவங்கள் அடுத்தடுத்த நிலைகளாகவும் சொல்லப்படுகின்றன. மூன்று நிலைகளுக்கும் 18 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்குதான் எனக்கு 18-ஆம் படி கருப்பணசாமி மற்றும் சபரிமலை 18 படிகள் போன்றவை நினைவுக்கு வருகின்றன. ஆக, ஆசீவகம் எனும் தத்துவ தரிசனத்தின் தோற்றம் அல்லது அடிப்படை என்பது மக்கள் வாழ்வியலில் இருந்தே கிளைத்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்.. வாழ்வின் தேவைகளுக்காக முதலில் சடங்குகளை(வேட்டைச் சமூகம்) மேற்கொள்கின்றனர் முன்னோர்; அச்சடங்குகள் ஒரு காலத்தில் வழிபாடாக(மேய்ச்சல் சமூகம்) மாற்றம் பெறுகிறது; காலம் நகர நகர அவ்வழிபாட்டுக்குத் தத்துவ வடிவம்(வேளாண் சமூகம்) தரப்படுகிறது; காலம் மேலும் நகர சடங்குகளும் வழிபாடும் தத்துவமும் ஒன்றிணைக்கப்பட்ட மதம்(நவீனச் சமூகம்) உருவாகிறது.
ஆசீவகத்தின் ஆறு வண்ணக் கோட்பாடு துவக்கத்தில் சடங்கு வழிபாடாகவே மக்களிடம் புழக்கத்தில் இருந்திருக்கும். பின்பே, அது த்த்துவ வடிவம் பெற்றிருக்கும். இதற்கான சான்றை இக்காலத்திலேயே நேரடியாகக் காட்ட இயலும். வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூசத்தன்று காட்டப்படும் ஜோதி தரிசனம். வள்ளலாரின் தைப்பூச ஜோதி தரிசனத்தின்போது விலக்கப்படும் ஏழு திரைகளில் ஆறாவது திரை வெண்திரை. வள்ளலார் வெள்ளாடையே உடுத்தி இருந்தார் என்பதை நினைவு கூரவும். ஆசீவகத்தில் ஆறு திரைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்க, வள்ளலார் ஏழாவதாய் ஒரு திரையை அதனோடு இணைக்கிறார். அதுதான் த்த்துவத்தளத்தின் நீட்சி. ஏழாவது திரை என்பதைக் கலப்புத்திரை என அவர் சுட்டுகிறார்.
வள்ளலாரின் ஏழுதிரைப் பாடல் வரிகள் –
”கரைவின் மாமாயைக் கரும் பெருந்திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
பேருறு நீலப்பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
பச்சைத் திரையால பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
பொன்மைத் திரையால பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
பேருறு நீலப்பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
பச்சைத் திரையால பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
பொன்மைத் திரையால பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!
கலப்புத் திரையால கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!”
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி!”
ஏதாவது ஒரு வண்ணத்தை மட்டுமே தனது வண்ணமாக ஒருவர் சொல்ல வேண்டும் அல்லது கொள்ள வேண்டும் என்பதுதான் சித்தாந்தவாதிகளின் சிக்கல். ஆத்திகத்தளமாயினும், நாத்திகத்தளமாயினும் அதுவே நிகழ்கிறது. இரண்டில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு மற்றதை எள்ளி நகையாடுவதே புத்திசாலித்தனம் என்பதாய்ச்சொல்லப்பட்டிருக்கி றது. உண்மையில்.. ஆத்திக நாத்திகத் தோற்றங்களைப் புரிந்து கொள்ளத்தலைப்படுவதே அதிபுத்திசாலித்தனமாய் இருக்க முடியும். நவீன உளவியல் வளர்ந்துவிட்ட காலத்தில் கூட.. சித்தாந்தச் சிக்கல்கள் தலைவிரித்தாடுவது அறிவின் போதாமையை அப்பட்டமாய்க் காட்டுகிறது.
அறிவின் போதாமையை அறிவு புரிந்து கொள்ளத்துவங்குவதையே உணர்தல் என்கிறோம். உணர்தல் ஒருபோதும் பகுதியன்று; முழுமையை நோக்கித் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் உந்துசக்தி. கண்ணுக்கு எதிரில் இருக்கும் காட்சிகளை மட்டுமே கவனத்தில் கொண்டு முடிவுக்கு வந்து விடும் அறிவை, ’உணர்தலே’ கண்ணுக்குத் தெரியாத காட்சிகளையும் கவனிக்கத் தூண்டுகிறது.
கருப்பு நிறத்தில் இருக்கும்போது அறிவு அறியாமை எனப்படும். நீலம், பச்சை, சிவப்பு, பொன்நிறம் என்பன் போன்ற நிறங்களில் இருக்கும்போது அறிவு பகுத்தறிவு எனப் பெயர் பெறுகிறது. அதுவே வெண்மை நிறத்தில் இருக்கும் போது ஞானம் எனப்படுகிறது.
ஒற்றைத்தளமான கறுப்பு நிறத்திலிருந்து, பன்முகத்தளங்களை உள்ளடக்கிய வெண்மை நிறம் நோக்கி ஒரு வாசகனை நகரத் தூண்டுவதால் வெண்முரசு எனும் பெயர் எனக்குப் பொருத்தமானதாகப் படுகிறது. சமீபமாய் நீங்கள் இலக்கியத்துறையில் மாற்றங்கள் எனும் தலைப்பில் உரையாற்றி இருப்பீர்கள். அவ்வுரையின் இறுதிப்பகுதி இப்படியாக அமைந்திருக்கும் –” எனது படைப்புகளில் நீங்கள் என்னைக் காண முடியாது அல்லது என் படைப்புகளில் வெளிப்படுவது நான்(Personality)அல்ல”. நுட்பமான இக்கருத்தை விளங்கிக் கொள்வது அதிசிரமம். விளங்கிக் கொள்வதற்காய் அதை ஒரு படிம்மாக்கினால்.. அதுவே வெண்முரசு.
உயிர்நலத்தை விரும்பும்,
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.