ஜெ
நலம்தானே?
வெண்முரசை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். காண்டீபம் வரை வந்துவிட்டேன். ஆனால் முழுசாக வாசிக்கவில்லை என்னும் எண்ணமும் இருக்கிறது. ஆகவே திரும்பிப்போய் மறுபடியும் வாசிக்கிறேன். மறுபடியும் வாசித்தாலும் மிச்சமிருக்கிறது. இதை வாசித்துமுடிக்க இந்த ஜென்மத்தில் முடியாது. இதற்குள்ளாகவே இருக்கவேண்டியதுதான்
கிருஷ்ணனின் கதைபாத்திரத்தை மகத்தான வடிவிலே உருவாக்கிவிட்டீர்கள். இந்த நாவல்மாதிரியே எவ்வளவு பார்த்தாலும் முழுசாககாணமுடியாததுபோல இருக்கிறது. ஒரு பெரிய பிரமிப்பு. அந்தந்தக்காட்சிகளில் அவனை மிக அணுக்கமாகப்பார்த்ததுபோலவும் ஆனால் மொத்தமாகப்பார்த்தால் கண்ணுக்கே தெரியாததுபோலவும் தோன்றிக்கொண்டிருக்கிறது. அதுதான் கண்ணனா என்ன?
ஆனால் நீலம் நாவலில் வரும் உண்ணிக்கண்ணன் மிக நெருக்கமானவன். அவனை அப்படியே அள்ளி மடியிலே வைத்து முத்தம்கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. அந்த பாவம் தவிர எல்லாமே பயங்கரமானவை. ஆகவேதான் தேவகிகூட வாயைத்திறந்து பிரபஞ்சத்தைப்பார்த்தபின்னர் மாயையான் மீண்டும் குழந்தையாகி விடு கண்ணா என்று கேட்டாள் என நினைக்கிறேன்
ஆர் விஜயலட்சுமி