Sunday, December 6, 2015

அர்ஜுன யோகம்



ஜெ

வெண்முரசு நாவல்களில் காண்டீபம் ஒரு மர்மமான நூல். யோகநூல் என்றுகூடச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். யோகத்தின் முதல் படி என்பது சாதாரண அன்றாட வாழ்க்கையில் இருந்து வெளியே பார்க்கும்படியாக ‘கண் திறப்பது’ தான். அர்ஜுனனுக்கு அது நிகழ்கிறது

அதன்பின்னர் அவன் கிளம்பி ஆழங்களுக்குச் செல்கிறான். அந்தர்வாஹினியாக போய்க்கொண்டிருக்கும் ஒரு பாதாளம். அங்கே மூலாதாரத்திலே உள்ள பாம்பு. பாம்புகளின் உலகமே அந்த ஆழத்தின் உருவகம்

அதன்பின் அடுத்தகட்டத்தில் ஆண்பெண் என்னும் பேதம் அழிகிறது. வேர்களின் உலகம். ஒழுகியலையும் உலகம்

அதன்பின்னர் ஐந்து முதலைகள். அவை காட்டும் அக உண்மைகள். ஐந்து பிராணன்களை அறிவது. வாசியைக் கட்டுப்படுத்துவது

அதன்பின்னர்தான் அவன் நேமியை அறிகிறான். அதன்பின் ஒரு களியாட்டம். அந்தத்தேரோட்டம்.

அந்த நிலையை அடைந்தபின் ஓர் யோகியாக அவன் ஆகிவிடுகிறான். சிவதனுஸுக்கு சமானமான காண்டீபம் அவன் கையில் ஒரு விளையாட்டுப்பொருளாக ஆகிவிடுகிறது

யோகியாக நிற்கும் அர்ஜுனனைக் கண்டு நாம் நாவலை முடிக்கிரோம். நுட்பமான அழகான நாவல் ஜெ

சுவாமி