Saturday, September 1, 2018

மழைப்பாடல் வாசிப்பு - தாமரைக்கண்னன், பாண்டிச்சேரி




திரு ஜெயமோகன் எழுதிவரும் நிகழ்காவியமான வெண்முரசு நாவலைப்பற்றி புதுவை வாசகர்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமையில் விவாதக்கூட்டங்களை நடத்துகிறார்கள். வெண்முரசு வரிசையின் இரண்டாம் நூலான மழைப்பாடலை பற்றி கடந்த ஏழு மாதங்களாக விவாதித்து வருகிறோம்.

 நண்பர்கள் வெண்முரசு நாவலின் நீண்டநாள் வாசகர்கள், முரசிமிழும் ஓசையை நன்குணர்ந்து எதிரொலிக்கக்கூடியவர்கள். வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் உள்ள தொடர்புகளை, புதுச்சொற்களை, அகதரிசனங்களை, மனிதமனத்தின் ஆழ்உணர்வுகளை சிறப்பாக விவாதிக்கக்கூடியவர்கள்.எனவே அவற்றை விடுத்து கடந்த ஜனவரி (2018) மாத கூடுகையில் நண்பர் ஜாஜா விளக்கிய அடிப்படையில் காவியத்தின் பல அடுக்குகளின் சிலவற்றை மட்டும் சற்றே பிரித்துப்பார்க்க முயல்கிறேன் , குறிப்பாக புயலின் தொட்டில் பகுதியின் தனிச்சிறப்புகளை மட்டும் பேசுகிறேன். இது ஒருவித மாறுபட்ட முயற்சி மட்டுமே.


புயலின் தொட்டில் பகுதியில் பாலை நிலம் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அரபக பணிகளுக்கு செல்பவர் தவிர்த்து பிற தமிழர் பெரிதும் பார்த்தறியாத பாலை. சங்க இலக்கியங்களில் சுட்டப்படும் பாலையானது குறிஞ்சி, முல்லை நிலங்கள் மழையின்மையால் தம்மியல்பிலிருந்து திரிந்த சுரம் மட்டுமே. உண்மையான பாலை நிலம் அதனினின்று வெகு தொலைவானது. புயலின் தொட்டிலில் அந்நிலம் இயல்பாகவே தன்னில் இருக்கும் அனைத்து பாத்திரங்களின் அகக்குரலாக மாறிப்போய்விடுகிறது.

பாலை நிலம்

ஆறலைக்கள்வர் அச்சுறுத்தும் பாழி, ஆத்மாவின் ஈரத்தைஎல்லாம் உறிஞ்சி வானுக்கனுப்பும் பாலை, வான்நோக்கி விரிந்திருக்கும் பெருவஞ்சத்தின் வாய், கனற்காற்றுக்கன்றுகள் சுற்றித்திரியும் ஊழ்வெளி, வசுமதியின் குழவி, சௌபாலனின் கொட்டில், பொழிலாய் சுனையாய் வாழ்விக்கும் கருணை.

காந்தாரங்கள்


புராண காந்தாரமானது பிரஜாபதியான அத்ரி முனிவரின் தீச்சொல்லிலிருந்து விரிகிறது. அங்கு காற்று தெய்வங்களும் நெருப்பு தெய்வங்களும் ஆட்சி செய்கின்றன. யயாதியின் தீச்சொல்லால் துரத்தப்பட்டு அப்பாழ் நிலத்தில் நுழைகிறான் துர்வசு. சபிக்கப்பட்ட அரசனுக்கு சபிக்கப்பட்ட தெய்வங்கள், “கும்பிடப்பட்டவனின் தெய்வங்கள்கனிகின்றன. அவர்தம் அருள்வடிவான நீர், மரம், விலங்குகளால் துர்வசுவின் கொடிவழி அப்பெருமணற்பரப்பில் கிளைத்தெழுகிறது.

ஒரு நாடாக வளர்ச்சி நிலையிலுள்ள காந்தாரம் அடுத்தது. அது தன் பொருளாதார வளச்சியால் மேலெழுகிறது. அதன் வடஎல்லையான புருஷபுரம் (பெஷாவர்) கிழக்கை மேற்குடன் இணைக்கும் வணிகவழியான பட்டுப்பாதையின் அருகிலுள்ளது. உத்தரபதத்தின் பொன்மழை மேகங்களால் குஃபாவதி பொன்மீன் செறிந்து ஓடுகிறாள். வளம் மிக்கதாக இருப்பினும் தலைநகரம் பெஷாவருக்கு மாற்றப்படவில்லை, காந்தாரநகரி தம்குடியின் அடையாளம் ஆதலால் அதைவிட அரசகுலத்தினர் விரும்பவில்லை.பொன்னின் வல்லமை காந்தார நகரியில் புதிய கோட்டையாக எழுகிறது, அது அங்குள்ள குன்றுகளை இணைத்து காந்தார நகரத்தை மையமாகக்கொண்டு கட்டப்படுகிறது.

பல்லவர்கள் வடதமிழகமெங்கும் ஏரிகளை வெட்டுகையில் இப்பாணியை கையாண்டிருப்பதை காணலாம். குறிப்பாக செஞ்சி அருகிலுள்ள பனைமலை ஏரி சிறுகுன்றுகள் சூழ நடுவில் அமைந்திருப்பதை இன்றும் பார்க்கமுடிகிறது. இது இயற்கையான நிலவமைப்பை மனிதத்தேவைகளுக்காக சில மாற்றங்கள் மட்டும் செய்து அதிகசிரமப்படாது பயன்படுத்திக்கொள்வதே ஆகும். மேலும் இது இயற்கையான ஒரு அரண். மனிதன் அனைத்தையும் அங்கிருந்தே எடுத்துக்கொள்கிறான். பழைய இலக்கியங்களின் படி மதுரை கூட எண்பெருங்குன்றங்களின் நடுவிலிருந்த நகரம் தான்.

எதிரிகளில்லாத பாலையில் எழும்பும் ஒரு கோட்டை காந்தாரத்தின் கர்வத்தை, ஒரு திடீர்ப்பணக்காரனின் மனநிலையுடன் ஒப்பிடவைக்கிறது. 

அரசியல் கண்ணோட்டத்தில் காந்தாரம் தன் ஆதிக்கத்தை பிறநாடுகள் மேல் செலுத்த, கீழ்நோக்கி நிலவிரிவடைய கங்கைக்கரை நாடுகளில் வலிமை மிகுந்த ஒன்றுடன் மணஉறவுகொள்ளவேண்டிய சூழ்நிலையிலிருக்கிறது. தூய க்ஷத்ரிய குருதி உடையவர்களாக காந்தாரஅரச குலத்தவர்தொல்குடி க்ஷத்ரியர்களால் அங்கீகரிக்கப்படாத நிலை அதற்கு ஒரு வேகத்தடையாகவும் உள்ளது. இவற்றிலிருந்து விடுபட அரசியல் நிமித்திகர்களால் அடுத்த வல்லரசாக வரக்கூடுமென கணிக்கப்படும் மகதத்தின் மணஉறவை நாடுகிறது காந்தாரம். மாறாக மகதமோ காந்தாரத்தின் தூதை குதிரைச்சவுக்காலடித்து அவமதித்து ஆறாத ஆழ்மனக்காயம் ஒன்றை பதிலாகத்தருகிறது. மேலும் மகதம் தன் இளவரசனுக்கு காசி நாட்டிலிருந்து இளவரசிகளை மணம்பேசி முடிக்கிறது. அச்செய்தியை ஒரு சூதன் மூலம் காந்தாரத்திற்கு சொல்லியனுப்புவதன் மூலம் அவர்களது குலத்தை இழிவுசெய்கிறது.. இப்படி ஒரு எதிர்வினை ஆற்றவேண்டிய நெருக்கடி காந்தாரத்திற்கு ஏற்படுகிறது. மேலும் மகதம் மணம்மறுப்பதால் சிற்றரசுகள் பெண்கேட்டு அணிவகுக்கின்றன. இந்நிலையில் அஸ்தினபுரியுடனான தன்மணஉறவால் பாரதவர்ஷம் வருங்காலத்தில் அஸ்தினபுரியின் கீழ்வருமென கணக்கிட்டு காந்தாரம், விழியில்லாத மன்னனுக்கு பாரதவர்ஷத்தின் பேரழகியான வசுமதியை மகட்கொடை அளிக்கிறது.  

லாஷ்கரர் பழங்குடிப்படிமம்


பழங்குடி சமுதாய பண்பாட்டின் சாட்சியாக லாஷ்கரர் என்னும் எட்டு குழுக்களின் தொகுப்பான மக்கள் காட்சிப்படுத்தப்படுகிரார்கள். காந்தாரத்தின் அனைத்துப்பெண்களும் அவர்கள் மட்டில் லாஷ்கரர்களே. அதனால் மகட்கொடை உரிமையும் அவர்களிடமே இருக்கிறது. தாய் தெய்வங்களை மட்டுமே வழிபடும் குடியினர். அவர்களது தெய்வங்கள் புராணக்கடவுளர்களுக்கு மணமுடித்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட.
காந்தார அரச குலத்தின்மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளபோதும்  நகரத்திலில்லாது தனித்து வெளியே தமக்கான ஒரு சிற்றூரிலே வாழ்கிறார்கள்.
நிமித்தங்கள் பார்த்து அதன்மூலம் நற்குறி தீக்குறி உரைக்கின்றனர். வைதீக சடங்குகளின்றி வேட்டையாடி பலி தரும் ஒரு கான்குடியினருக்கான சடங்குகளை வழிபாடாக நிகழ்த்துகின்றனர். மணப்பெண்ணுக்காக தாலிப்பனைப்பூ தேட பாலையில் பெண்கள் மட்டுமே மூதன்னையின் வழிகாட்டுதல்களின்படி தனித்து பயணிப்பதையும் பார்க்க முடிகிறது.
உச்சமாக உடற்குறை உள்ள ஒருவனுக்கு மகட்கொடை மறுக்கிறார்கள், பாலையின் தெய்வங்கள் விழியிலாதவனை ஏற்பதில்லையென கருதி மணப்பெண்களை தம்மூருக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்துகிறார்கள். இவை விலங்குகளின் செயல்பாடுகளை ஒத்துள்ளது, விலங்கு நெறியினைப்பின்பற்றும் பழங்குடியினர். ஆனால் அவனே வீரத்தோடு போரிட்டு பெண்கவர்ந்ததும் அவனை வாழ்த்தி அவன் குறைதவிர்த்து வீரத்தை உவந்து அவனை ஏற்றுக்கொள்ளும் லாஷ்கரர்.
கானல் நீர்பற்றி வசுமதி கூறும் கதையானது ஒரு அழகிய நாட்டார்கதையை ஒத்திருக்கிறது, பகன்,ஸித்தி கதைகூட இறுதியில் அவ்வடிவத்தையே சேர்க்கிறது.

இசை

திருதராஷ்ட்ரன் மூலமாக இசைபற்றிய சில அழகான காட்சிகளை கதையில் தருகிறார் ஜெ. காந்தார நகரியில் நுழையுமுன் இரவின் விண்மீன்கள் இறைந்து கிடக்கும் பாலைநதியான தாரநாக ஆற்றை, விஹாரி ராகத்துடன் ஒப்பிடுகிறான் திருதன்.
பாலைவன செம்மண்புயலுக்கு நடுவில் நிற்கும்போதும் அது மந்திர ஸ்தாயியில் ஒலிப்பதாக உணர்கிறான், செவ்வழிப்பண்ணுடன் அதை ஒப்பிடுகிறான், செவ்வழிப்பண் என்பது இன்றைய யதுகுலகாம்போதி ராகம், காலைத்தூக்கி நின்றாடும் தெய்வம் என்றொரு கீர்த்தனையிருக்கிறது.

யாழ்போல காற்றின் இசையை மொழிமீட்சி செய்யும் திருதனின் இசையை உணரத்துவங்கும் வசுமதி அவன் கேட்டது அலைப்பண் என்கிறாள், அது இந்தளம் எனும் தென்னகப்பண், இந்தளம் என்பது இன்றைய கர்நாடக இசையில் மாயமாளவ கௌளை ராகமாகும்.  இசை கற்பவர்களுக்கு முதலில் கற்றுத்தரப்படும் ராகமும் கூட. இளையராஜாவின் பலபாடல்கள் முக்கியமாககாதல்கவிதைகள் படித்திடும் நேரம்மாயமாளவகௌளை தான்.
நாகசூதன் நந்துனி எனும் இசைக்கருவியை மீட்டுவதாக வருகிறது, நந்துனி இன்றும் கேரளத்தில் இசைக்கப்படும் ஒரு தந்திக்கருவி. பார்க்கையில் வயலின் போல தோற்றமளிக்கிறது அனால் பிடில் (வில்). நந்துனி கேரள கிராமிய இசைக்கருவியென கூறப்படுகிறது, முக்கியமாக களமெழுது பாட்டில் இசைக்கப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம்
பீஷ்மரின் பயணத்தில் அவர் சிந்து சமவெளி பண்பாட்டில் முக்கியமான இடமான மொகன்ஜதாரோ வருகிறார். அந்தப்பண்பாடு அந்நகரத்தின் அமைப்பு, அதற்கும் தமிழ்நாகரீகத்துக்குமான தொடர்பு இவையெல்லாம் பதிவு செய்திருக்கிறார் ஜெ. முதுமக்கள்தாழி என்னும் பண்பாடு சிந்துசமவெளியிலும் தமிழகத்திலும் மட்டுமே காணப்படுகிறது இடையில் எங்குமே இல்லை, மேலும் அக்னி புராணத்திலுள்ள சான்றான காந்தாரர்களுக்கும் தமிழக அரசர்களுக்குமான சகோதர உறவு பற்றியும் கூறுகிறார். 

நிலம் மொழி
காந்தார நகரி என்பது இன்றைய ஆப்கனின் காந்தஹார், புருஷபுரம், மூலஸ்தானநகரி ஆகியவை இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் மூல்தான். தக்ஷசிலை இன்றும் தக்ஷசீலா தான்.
பஷ்தூரர் எனும் பாலைமக்கள் பற்றிய குறிப்பு இரு இடங்களில் வருகிறது. ஆப்கனின் தேசிய மொழி உருது அல்ல பஷ்து. அம்மொழிபேசும் பஷ்தூன் மக்களே ஆப்கனில் மிகுதி, பாகிஸ்தானிலும் அதிகம். அவர்கள் கலாச்சாரம் இலக்கியம் பற்றி நிறையவே படிக்கக்கிடைக்கிறது.
தாரநாகம் ஆறு உண்மையானதுதான் அது தர்னாக் (Tarnak) எனப்படுகிறது. ஆர்யகௌசிகை இன்றைய அர்கந்தப் நதியாகவும், குஃபாவதி காபூல் நதியாகவும் இருக்கலாம்.       
குன்று மேலிருக்கும் பவமானன் ஆலயம் இன்று எங்குள்ளது என்று தெரியவில்லை.
வங்க, கலிங்க துறைமுகங்களான தாம்ரலிப்தி, பாலூர் ஆகியவை அன்றைய காலத்தில் எவ்வளவு முக்கியமாக   துறைமுகங்களாக உள்ளது என அறியமுடிகிறது.

சாளரத்தின் வழி
நண்பர்களே, சுயமுன்னேற்ற வகுப்புகளில் உளவியல் சார்ந்த சிறிய செய்முறைப்பயிற்சி ஒன்று நடக்கும், ஜோ ஹாரி சன்னல் என்னும் அந்த கருவியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


முதற்கட்டம்  நீங்களும் நானும் அறிந்த வெண்முரசு, இது வழக்கமான வாசித்தலின் வழி  நாம் கண்டடைவது. இரண்டாவது மூன்றாவது கட்டங்களான திரைமறைவுப்பகுதி , குருட்டுப்பகுதிகள் நீங்களும் நானும் தனித்தனியே அறிந்த வெண்முரசு. இது அவரவர் அனுபவங்கள், வாசிப்புப்பயிற்சி, கூர்ந்து கவனித்தல், ஆய்வு செய்தல் என்பன முதலாக அடைவது. கூட்டு வாசிப்பின் மூலமாக, அமர்வுகளில் இணையக்கட்டுரைகளில் பகிர்வது மூலமாக நாம் இதை ஓரளவேனும் சமன் செய்ய முடியும். இறுதியாக உள்ள அறியப்படாத பகுதி. இதற்கான சாத்தியம் எப்போதுமே வெண்முரசுக்கிருக்கிறது. மீண்டும் மீண்டும் படித்தாலும், ஒவ்வோர் முறையும் ஒரு புதிய அறிதலை நமக்குத்தருகிறது, இதுவும், வெண்முரசின் என்சைக்ளோபீடியாத்தன்மையும், காலத்தை கடந்து இந்நூல் நிலைபெறுவதற்கு ஏதுவாகும்.

நிறைவு
எவ்வளவு பேசியபோதும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டதாக நிறைவு எப்போதும் வருவதேயில்லை போலும். வெண்முரசு ஒரு பெருநதி, என் கொள்கலம் சிறியதோ பிழைபட்டதோ அறியேன். எனினும் இந்த வாய்ப்பின் வழி நானறிந்த வெண்முரசை பகிர்ந்து முன்னறிந்திராத வெண்முரசைப் பெற்றுக்கொண்டேன். நன்றி